Sunday, September 23, 2012


345. நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்!


பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார். இவரைப் பற்றிய குறிப்புக்களை பாடல் 283-இல் காண்க.

 
பாடலின் பின்னணி: அழகான பெண் ஒருத்தி, அவள் பெற்றோர்களால் வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்தாள். அவளை மணக்க விரும்பிப் பல மன்னர்கள் வருகின்றனர். ஆனால் அவள் தமையன்மார் அவளைத் தகுதியுடையவர்க்குத்தான் தருவோம் என்று கூறிப் போரிட ஆயத்தமாகின்றனர்.  அங்கு நடைபெறப்போகும் போரால் அவ்வூர் என்ன ஆகுமோ என்று புலவர் அண்டர் நடுங்கல்லினார் வருந்துவதை இப்பாடலில் காணலாம். 

 

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

 
களிறுஅணைப்பக் கலங்கின, காஅ
தேர்ஓடத் துகள்கெழுமின, தெருவு
மாமறுகலின் மயக்குற்றன, வழி
கலம்கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல்மறவர் இறைகூர்தலில்                                5


பொறைமலிந்து நிலன்நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை            10


மையல் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமேஇவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்எனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்                          15


குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும் அன்னோ !
என்னா வதுகொல் தானே
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே!


அருஞ்சொற்பொருள்: 1. அணைப்பு = தழுவுகை; கா = சோலை. 2. துகள் = புழுதி. 3. மா = குதிரை; மறுகுதல் = சுழல்தல், உலாவுதல். 4. கலம் = படைக்கலம். 5. தெறல் = அழிக்கை; இறைகூர்தல் = தங்குதல்.  6. பொறை = பாரம். 7. வம்பு = புதுமை. 8. பிடி = பெண்யானை; உயிர்ப்பு = பெருமூச்சு; கைகவர் இரும்பு = கையால் பற்றி ஊதப்படும் துருத்தி. 9. ஓவு = கதவு; உறழ்தல் = ஒத்தல்; இரு = பெரிய; புறம் = பக்கம்; கண்ணி = கருதி.12. அளியர் = இரங்கத் தக்கவர்; தன்னைமார் = தமையன்மார்.13. செரு = போர். 14. நிரல் = ஒப்பு. 15. பலகை = கேடயம்; கதுவாய் = வடுப்படுதல்; வாளர் = வாளை ஏந்தியவர். 17. கழாஅத்தலையர் = கழுவாத தலையையுடையவர்; கருமை = வலிமை; கருங்கடை = வலிதாகக் கடையப்பட்ட. 18. அன்னோ = ஐயோ. 20. பன்னல் = பருத்தி; பணை = வயல், மருத நிலத்து ஊர்.

 
கொண்டு கூட்டு: கா கலங்கின; தெரு துகள் கெழுமின, வழி மயக்குற்றன, காவல் கண்ணி வந்த வம்ப வேந்தர் பலர்; தன்னைமார், வேண்டி, வேண்டாராய், பலகையராய், வாளராய், கழாத்தலையராயுள்ளனர்; இன்ன மறவர்த்தாயினும் நல்லூர் என் ஆவது எனக் கூட்டுக.


உரை: யானையின் பெருமூச்சுப்போல் காற்றை வெளியிடும் உலைத் துருத்தியின் வாயிரும்பு போன்ற இரண்டு கதவுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடத்தில் இப்பெண் பாதுகாவலாக வைகப்பட்டிருக்கிறாள். அவளை அடைய விரும்பி வேந்தர் பலரும் தங்கள் பெரும்படையுடன் வந்தனர். போர்புரிவதைத் தம் இயல்பாகக் கொண்ட மறவர்கள் தங்கள் படைக்கருவிகளுடன் வந்து தங்கியதால் நிலம் சுமையைத் தாங்க முடியாமல் நெளிந்தது.  யானைகளைக் கட்டுவதால் சோலையிலுள்ள மரங்கள் நிலைகுலைந்தன.  தேரோடியதால் தெருக்களில் புழுதிகள் நிரம்பின. குதிரைகள் சுற்றித் திரிவதால் வழிகள் உருத் தெரியாதவாறு மாறின. படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த்துறைகள் குழம்பின.  இவ்வாறு, தம் படையோடு புதிது புதிதாகப் பலவேந்தர்கள் இப்பெண்ணை விரும்பி வந்தனர்.

 
கரிய கண்களையும், விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும், மயக்கம் உண்டாக்கும் பார்வையும் உடைய இவளை மணக்க விரும்பி  வந்தவர் இரங்கத் தக்கவர்.  இவள் தமையன்மார், பெண்கேட்டு வந்தவர் தரும் செல்வத்தை விரும்ப மாட்டர்கள். எமக்கு நிகரில்லாதவர்களுக்கு இவளைத் தரமாட்டோம். என்று கூறி, போர்புரிவதையே விரும்பி, கழிகளால் கட்டப்பட்ட கேடயத்தை ஏந்தி, பகைவர்களுக்குப் புண்களை உண்டாக்கும் வாளோடு, கூட்டமாகக், குருதி நாறும் புலாலுடன் கழுவாத தலையினராய், வலியக் கட்டப்பட்ட காம்பையுடைய நெடிய வேலேந்துவர்.  இத்தகைய வீரர்கள் இருந்தாலும், ஐயோ, பருத்திவேலி சூழ்ந்த இந்த மருதநிலத்து ஊர் என்ன ஆகுமோ?

No comments: