Wednesday, August 15, 2012


336. அறன்இலள் பண்புஇல் தாயே!

பாடியவர்: பரணர்.  இவரை பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.

பாடலின் பின்னணி: ஒரு வேந்தன் ஒரு பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்புகிறான். அப்பெண்ணின் தந்தை அவளை அவ்வேந்தனுக்குத் திருமணம் செய்துவிக்க விரும்பவில்லை.  ஆகவே, அவ்வேந்தனுக்கும் அப்பெண்ணின் தந்தைக்கும் போர் தொடங்கும் நிலை உருவாகியுள்ளது. போரைத் தடுத்து நிறுத்துவதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை.  இதைக் கண்ட புலவர் பரணர், அப்பெண்ணின் தாய் அவளை அழகாக வளர்த்திருந்தாலும் இப்பொழுது நடைபெறப் போகும் போரைத் தடுப்பதற்கு அவள் முயற்சி செய்யாததால், அவள் அறமில்லாதவள் என்று கூறுகிறார்.

காஞ்சித் திணை: பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
மகட்பாற் காஞ்சி: ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;                                  5

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
அன்னோ, பெரும்பேது உற்றன்றுஇவ் வருங்கடி மூதூர்;
அறன்இலள் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்                                  10

தகைவளர்த்து எடுத்த நகையொடு
பகைவளர்த்து இருந்தஇப் பண்புஇல் தாயே.

அருஞ்சொற்பொருள்: 1. வேட்ட = விரும்பிய; கடவன = செய்ய வெண்டியவன; கழிப்பு = கழித்தல் = போக்குதல். 3. வீங்கல் = பருத்தல், மிகுதல். 5. மூழ்த்தல் = மூடுதல். 6. இயவர் = வாச்சியக்காரர் (இசைக் கருவிகளை வாசிப்பவர்கள்); பல்லியம் = பல இசைக் கருவிகள்; கறங்கல் = ஒலித்தல். 7. அன்னோ = ஐயோ; பேது = வருத்தம்; கடி = காவல். 9. வெற்பு = மலை ; கோங்கு = ஒரு மரம். 10. முகை = மலரும் பருவத்தரும்பு; வனப்பு = அழகு; ஏந்திய = தாங்கிய. 11. தகை = அழகு; நகை = மகிழ்ச்சி.

கொண்டு கூட்டு: வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு சேரா; மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர் பேதுற்றன்று; தாய் அறனிலள் என்று கூட்டுக.

உரை: இந்தப் பெண்ணை மணஞ்செய்துகொள்ள விரும்பிய வேந்தன் மிகுந்த சினமுடையவன்.  இப்பெண்ணின் தந்தை தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமாட்டான்.  ஒளிறும் முகத்தில் உள்ள, பெரிய தொடி அணிந்த கொம்புகளையுடைய யானைகள் காவல் மரத்தில் கட்டப்படவில்லை.  வேந்தனையும் அப்பெண்ணின் தந்தையையும் சேர்ந்துள்ள, வேலேந்திய வீரர்கள் வாய்திறவாமல் உள்ளனர்.  இசை வல்லுநர்களும் அறியாத பல இசைக்கருவிகள் முழங்குகின்றன.  ஐயோ! அரிய காவல் உள்ள இந்தப் பழமையான ஊர் பெரும் துன்பத்துக்குள்ளாகியது. வலிமை வாய்ந்த வேங்கை மலையில் மலர்ந்த, கோங்கமரத்தினுடைய அரும்பின் அழகை ஒத்த, முதிராத இளமுலையையுடைய இப்பெண்ணை மிகவும் அழகுடையவளாக வளர்த்ததால் மகிழ்ச்சியைப் பெற்ற அவள் தாய், இப்போது பகையை வளர்த்திருக்கும் பண்பில்லாதவள். உறுதியாக அவள் அறமில்லாதவள்.

சிறப்புக் குறிப்பு:  ஒருபெண்ணை திருமணம் செய்விப்பது அவள் தந்தையின் கடமை. இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்ணின் தந்தை, தன் பெண்ணைத் திருமணம் செய்விக்காததால், ‘கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்’ என்று புலவர் கூறுகிறார்.  ‘களிறும் கடிமரமும் சேரா, சேர்ந்த ஒளிறுவேள் மறவரும் வாய்மூழ்த்தனர்’ என்பது யானைகளும் வீரர்களும் போருக்கு ஆயத்தமாகி நிற்பதைக் குறிக்கிறது.

No comments: