Tuesday, April 5, 2011

239. இடுக சுடுக எதுவும் செய்க!

பாடியவர்: பேரெயில் முறுவலார் (239). எப்பொழுதும் முறுவலோடு இருந்தமையால் இவர் முறுவலார் என்று அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அது, அவருடைய இயற்பெயராகவும் இருந்திருக்கலாம். இவர் பாண்டிய நாட்டில் இருந்த பேரெயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகையால் இவர் பேரெயில் முறுவலார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் மட்டுமல்லாமல் குறுந்தொகையிலும் ஒருபாடலும் (17) இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன் (239). இவன் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். மூவேந்தர்களுக்கு வேண்டிய பொழுது அறிவுரைகளும், படையுதவியும் அளித்த குறுநிலமன்னர்களுக்கு மூவேந்தர்கள் தம் பெயர்களைப் பட்டமாகச் சூட்டுவது சங்க காலத்தில் வழக்கிலிருந்ததாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். அவ்வழக்குக்கேற்ப, பாண்டியன் நெடுஞ்செழியன், நம்பி என்னும் குறுநில மன்னனுக்குத் தன் பெயரைச் சூட்டியிருக்கலாம் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை கூறுகிறார்.
படலின் பின்னணி: சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர். அப்பொழுது, பேரெயில் முறுவலார், ”நம்பி நெடுஞ்செழியன் பலதுறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

தொடியுடைய தோள்மணந்தனன்;
கடிகாவிற் பூச்சூடினன் ;
தண்கமழுஞ் சாந்துநீவினன் ;
செற்றோரை வழிதபுத்தனன் ;
5 நட்டோரை உயர்புகூறினன் ;
வலியரென வழிமொழியலன் ;
மெலியரென மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்பறியலன் ;
இரந்தோர்க்கு மறுப்பறியலன் ;
10 வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;
வருபடை எதிர்தாங்கினன் ;
பெயர்படை புறங்கண்டனன் ;
கடும்பரிய மாக்கடவினன் ;
நெடுந்தெருவில் தேர்வழங்கினன் ;
15 ஓங்குஇயற் களிறுஊர்ந்தனன்;
தீஞ்செறிதசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்
20 இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,
படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே.

அருஞ்சொற்பொருள்:
1. தொடி = வளையல். 2. கடி = காவல்; கா = சோலை. 3. நீவுதல் = தடவுதல். 4. செற்றோர் = பகைவர்; வழி = கிளை, சந்ததி; தபுத்தல் = அழித்தல். 5. நட்டோர் = நண்பர். 6. வழிமொழிதல் = பணிந்து கூறுதல், சொல்லியவற்றை ஏற்றுக் கொள்ளுதல். 7. மீக்கூறல் = புகழ்தல். 13. கடு = விரைவு; மா = குதிரை; பரிதல் = ஓடுதல்; கடவுதல் = செலுத்துதல். 16. தசும்பு = கள் உள்ள குடம்.; தொலைத்தல் = முற்றுப்பெறச் செய்தல். 18. மயக்குதல் = ஏமாற்றுதல். 20. ஒன்றோ – அதிசய இரக்கச் சொல். 21. படுதல் = உண்டாதல், சம்மதித்தல்; வெய்யோன் = விரும்பத்தக்கவன்.

உரை: நம்பி நெடுஞ்செழியன் வளையல்கள் அணிந்த மகளிரின் தோளைத் தழுவினான்; காவலுடைய சோலையிலுள்ள மரங்களிலுள்ள பூக்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசினான்; பகைவரைக் கிளையோடு அழித்தான்; நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்; வலிமையுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்; தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்; பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்; தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்; வேந்தர்களின் அவையில் தனது உயர்ந்த புகழ் தோன்றுமாறு செய்தான்; தன்னை எதிர்த்துவரும் படையை முன்நின்று தடுத்தான்; புறங்காட்டி ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்; விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தினான்; நெடிய தெருக்களில் தேரில் சென்றான்; உயர்ந்த இயல்புடைய யானையைச் செலுத்தினான்; இனிமையான கள் நிரம்பிய குடங்களைப் பலரோடு பகிர்ந்து குடித்து முடித்தான்; பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைத் தீர்த்தான்; பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்; இவ்வாறு, அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான். ஆகவே, இப்புகழை விரும்புவோனது தலையைப் புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும்.

சிறப்புக் குறிப்பு: “வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினான்” என்று புலவர் பேரெயில் முறுவலார் கூறுவதிலிருந்து, நம்பி நெடுஞ்செழியன் முடிசூடிய மூவேந்தர்களில் ஒருவன் அல்லன் என்பது தெரியவருகிறது.

No comments: